தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்காக அரசு தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது விவசாயிகள், விண்ணப்பித்த அதே நாளில் இணைய வழி மூலம் பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
முன்னதாக, பயிர்க்கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, புதிய இணையதள வசதி மூலம், விண்ணப்பித்த நாளில் விவசாயிகளில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பயிர் கடன் பெற முடியும். அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகை, சாகுபடி நிலத்தின் பரப்பளவு மற்றும் பயிர் வகை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
புதிய திட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அணுகலாம். அதேபோல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியார் வங்கிகளின் வேளாண்மைக் கடன் பிரிவுகள், தமிழ்நாடு அரசின் உழவன் செயலி மற்றும் சில வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
* தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயி அல்லது நிலம் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயி.
* விண்ணப்பிக்கும் விவசாயிக்கு வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
* ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை செலுத்தியிருக்க வேண்டும்.
* ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேவையான ஆவணங்கள் :
* அடங்கல் அல்லது இ-அடங்கல்
* சிட்டா நகல்
* ஆதார் அட்டை
* வங்கி கணக்கின் முதல் பக்க நகல்
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை :
பயிர்க்கடனை தவறாமல் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வட்டி சலுகை மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.