தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் மட்டுமே பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான இரண்டாவது மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆரம்பத்தில் இது ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், காவல்துறை பாதுகாப்பு காரணங்களால் ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
அதன்படி, தவெக தலைவர் விஜய், மாநாடு 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். இதையடுத்து மதுரை பாரபத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான இடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதனை சுத்தம் செய்வது மற்றும் மேடை அமைப்பது போன்ற பணிகள் தீவிரமக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டை முன்னிட்டு, காவல்துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கும் தவெக சார்பில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பதிலில், “மாநாட்டிற்கான பிரதான மேடை 200 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாகவும், விஜய் நடைபயணம் செய்யும் பாதை சுமார் 800 அடி நீளமுள்ளதாகவும் அமைக்கப்படுகிறது.
மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், 1.20 லட்சம் ஆண்கள், 25,000 பெண்கள், 4,500 முதியவர்கள் மற்றும் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டிற்கு மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்த மருத்துவத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கூட வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் அவசர மீட்பு பணிகளுக்காக 12 அவசர நுழைவு பாதைகள் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 3,600 பேர் வீதம் பேருந்துகள், வேன்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகை தரவுள்ளனர். பங்கேற்பாளர்களுக்காக 1.5 லட்சம் நாற்காலிகள், 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் வசதிகள், 400 தற்காலிக கழிப்பறைகள், 50க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், சிசிடிவி கேமராக்கள், 420 ஒலி பெருக்கிகள் மற்றும் 20,000 மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு தனிப்பட்ட பாஸ் தேவையில்லை. உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்கும் 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கொடி ஏற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், தலைவர் விஜய்யின் உரை மற்றும் நன்றி உரை ஆகியவை இடம்பெறும். இந்த மாநாட்டில், வேறு எந்த முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. விஜய்யே ஒரே பேச்சாளர் ஆவார். மேலும், மதுரை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் திடல் வரை அவருக்கு எந்தவொரு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : யூனியன் வங்கியில் மாதம் ரூ.64,000 சம்பளத்தில் வேலை..!! 250 காலியிடங்கள்..!!