பொதுவாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். அதே சமயம், காஃபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து அதிகமாக குடிக்கின்றனர். ஆனால், இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் சரியாக இருக்குமா?
ஸ்டான்ஃபோர்டு மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற குடல் நிபுணரும், ஐரோப்பிய ஃபங்க்ஷனல் மெடிசின் வல்லுநருமான டாக்டர் சௌரப் சேத்தி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உணவுப் பழக்கங்களைச் சுட்டிக்காட்டும் சில பரிச்சயமான உணவுகள் குறித்த விஞ்ஞான அடிப்படையிலான உண்மைகளை பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக நம்மால் நம்பப்பட்டுள்ள உணவுக் களஞ்சியங்களை இவர் புதிய கண்ணோட்டத்தில் விளக்குகிறார்.
வாழைப்பழம் : வாழைப்பழம் நன்கு பழுத்த நிலையில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே பலரின் வழக்கமான எண்ணம். ஆனால் டாக்டர் சௌரப் கூறுவதாவது, லேசாக காய்ந்த நிலையில் வாழைப்பழங்களை எடுத்துக்கொள்வது நம் குடல் நலனுக்கு மிகவும் நல்லது. இது ‘ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச்’ எனப்படும் உறுதியான மாவுச்சத்தைக் கொண்டிருப்பதால், அது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, குடலுக்கான நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்க உதவுகிறது. இதே பழம் பழுப்பு நிறமாக மாறும் போதோ, அதன் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி, சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தக் கூடியதாகவும் இருக்கும்.
காஃபி : தினமும் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பது பலருக்கும் வழக்கம். இது குடலின் இயல்பு இயக்கத்திற்கு உதவுவதோடு, நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் பணியிலும் பங்கு வகிக்கிறது. ஆனால், வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது அல்லது அதிக அளவில் குடிப்பது, அசிடிட்டி, ரிஃப்ளக்ஸ், மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை கூட தூண்டக்கூடியதாக இருக்கலாம்.
மசாலா பொருட்கள் : நம் சமையல் அடுப்பில் வழக்கமாக இருக்கும் மஞ்சள், இஞ்சி, பெருஞ்சீரகம் போன்றவை வெறும் சுவைக்கான சேர்க்கைகள் மட்டுமல்ல. இவை உடலின் அழற்சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. குடலை வலுப்படுத்தும் இயற்கை மருந்துகள்.
வெள்ளை அரிசி : வெள்ளை அரிசி உடல் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து பெரிதும் பரவியுள்ளது. ஆனால் சமைத்து குளிர வைத்த அரிசி, ‘ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச்’ உருவாக்குகிறது என்பது பலருக்குத் தெரியாமல் போகிறது. இது நார்ச்சத்திற்குச் சமமாக செயல்பட்டு, குடல் நலத்தை மேம்படுத்துகிறது. “சரியான முறையில் எடுத்துக்கொள்ளப்படும் வெள்ளை அரிசி கூட, நம் குடலுக்கு நன்மை பயக்கும்” என்கிறார் டாக்டர் சேத்தி.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.