நான் உருவாக்கிய ஆலமரத்தை அன்புமணி வெட்ட முயற்சிப்பதாக ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தைலாபுரத்திற்கு வருகை தரும் அன்புமணி, தாயை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறார். என்னிடம் பேச கூட தயங்குகிறார். எப்போதும் ஐயா என்று அழைப்பவர்கள், இன்றைக்கு ராமதாஸ் என்று என் பெயரை சொல்லி அழைக்கிறார்கள். இதற்கு காரணம் அன்புமணி தான்.
என்னிடம் இருந்து பாமகவை கைப்பற்றி, ‘நான் தான் இனி பாமக’ என்று சொல்லத் துடிக்கிறார் அன்புமணி. அவரின் தலைவர் பதவி மே மாதத்துடன் முடிந்துவிட்டது. எனக்கே தெரியாமல் சில உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார். எனது ஆதரவாளர்களை அவர் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார்.
தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். ஆனால், அந்த ஆலமரத்தின் ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அதைக் கொண்டு மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார். பணம் கொடுத்து கட்சிப் பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கியுள்ளார். இவ்வாறு செய்யும் அன்புமணி மீது நடவடிக்கை எடுத்தால், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை பாதாளத்தில் தள்ளிவிடுவார். அதனால் தான், அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன்.
நான்கு சுவர்களுக்குள் பேசுவதை, பொது வெளியில் பேசுவதாகக் கூறி, அன்புமணி அனுதாபம் தேடி வருகிறார். பொது வெளியில் என்னைப் பற்றி பேசாமல் இருப்பதுபோல நாடகமாடுகிறார். ஆனால், பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் வசைபாடுகிறார். வரும் 17ஆம் தேதி பாமக பொதுக்குழுவை கூட்டியுள்ளேன். ஆனால், வரும் 9ஆம் தேதி அன்புமணி போட்டி பொதுக்குழுவை நடத்துகிறார்.
பாமக இரண்டாக உடைந்துவிட்டது என்பது போல மக்களிடம் ஒரு மாயை உருவாக்கிவிட்டார். நாம் அவருக்கு என்ன அறிவுரை சொன்னாலும், அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். எப்போதுமே தைலாபுரம் தான் பாமகவின் தலைமை அலுவலகம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். அன்புமணியின் பொய் வார்த்தைகளை நம்பி அவருடன் சென்றவர்கள், மீண்டும் என்னிடம் வர வேண்டும். அவ்வாறு திரும்பி வந்தால், அவர்களை பாசத்துடன் அரவணைத்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வெறும் ரூ.1,000 முதலீடு.. வட்டி மட்டுமே ரூ.4,04,130.. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..
Leave a Reply