கருவில் இருக்கும் குழந்தை ஆணா?. பெண்ணா?. எடப்பாடியில் ஸ்கேன் பார்த்த மருத்துவமனைக்கு சீல்!. 3 பேர் கைது!

எடப்பாடியில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து 3 பேரை கைது செய்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அரவிந்த் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் ஸ்கேன் சென்டரில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து தெரிவிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இங்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சம்பவம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தனிப்படையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.

ஆய்வில், இங்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் கருவியை கொண்டு தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவர் கண்ணன் என்பவர் வாடிக்கையாளர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்கேன் கருவியை கைப்பற்றிய தனிப்படையினர், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி மற்றும் உதவியாளர் மேகநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Readmore: பிறந்தநாள் இறந்தநாளாக மாறிய சோகம்..!! சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி தூக்கத்திலேயே மரணம்..!!