தனியார் ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது எப்படி..? குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..!!

சங்ககிரி அருகே ஆம்னி பேருந்தில் 2.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட் அருகே பயணிகள் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, பேருந்தில் பயணித்த கோவை நகை பட்டறை ஊழியர் சங்கர் என்பவர், தான் கொண்டு வந்த 2.8 கிலோ நகைகளை இருக்கையிலேயே வைத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார்.

பின்னர், மீண்டும் இருக்கைக்கு வந்த சங்கர், தான் கொண்டு வந்த பேக்கை பார்த்த போது பேக் இல்லாததால் தேடி பார்த்துள்ளார். ஆனால், அந்த பேக் கிடைக்கவில்லை. அதில் தான் 2.8 கிலோ தங்க நகைகள் இருந்ததாகவும், அதை பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சங்ககிரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், பேருந்தில் சோதனை செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் தான் இந்த நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கோவைக்கு விரைந்த போலீசார், பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளி மெரிஜா (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் (57), சீனிவாசனின் நகை பட்டறையில் இருந்து, நகைகள் எடுத்துச் செல்வதை நோட்டமிட்டு அவரது நண்பர் மெரிஜா (28) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அவர் ஆம்னி பேருந்தில் செல்ல, பாலசுப்ரமணியன், பேருந்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த பேருந்து சங்ககிரி வைகுந்தம் டோல்கேட்டில் நின்றதும் பாலசுப்ரமணியன் மெரிஜாவுக்கு செல்போன் மூலம் சிக்னல் கொடுத்துள்ளார். இதையடுத்து, உடனே மெரிஜா, நகை பையை எடுத்துக்கொண்டு, அதே மாதிரியான வேறு பையை அங்கு வைத்துவிட்டு, பைக்கில் ஏறி தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ATM-இல் பணம் எடுக்கும்போது உள்ளே சிக்கிக் கொண்டால் என்ன செய்வது..? இது பலருக்கும் தெரியாது..!! கட்டாயம் படிங்க..!!