தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தமிழ்நாட்டின் மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் சில இடங்களில் மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய காற்று வீச வாய்ப்புள்ளது. அதேசமயம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி – காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். தெற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது மிக மெதுவாக வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தின் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், டெல்டா உள்ளிட்ட ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக மழைப்பொழிவை கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply