சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில், சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஒரு குழுவினர், ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா வேன் ஒன்றில் புறப்பட்டு வந்தனர். இந்த வேனை ராசிபுரத்தைச் சேர்ந்த 29 வயதான ஸ்ரீதரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஏற்காடு வந்து சேர்ந்த இந்த குழுவினர், பல்வேறு சுற்றுலா இடங்களைக் கண்டு ரசித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் சேர்வராயன் கோவில் பகுதிக்கு சென்றிருந்தனர். அங்குச் சென்ற பிறகு, வேன் ஓட்டுநர் ஸ்ரீதரன் உட்பட அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து மீண்டும் ஏற்காடு நகரை நோக்கி வேனில் புறப்பட்டனர்.
சிறிது தூரம் பயணித்த நிலையில், வேன் மிகவும் செங்குத்தான இறக்கமான மலை சாலையில் வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேருக்கு காயம் அதிகமாக இருந்த காரணத்தால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ரயில் நிலையங்களில் மட்டும் ஏன் மெடிக்கல் ஷாப் இல்லை தெரியுமா..? மத்திய அரசின் அடுத்த பிளான் இதுதான்..!!












