வீட்டு மின் இணைப்புகளின் உரிமையாளர் பெயரை மாற்றுவதில் பொதுமக்கள் சந்தித்து வந்த நீண்ட கால தாமதங்களை சரிசெய்யும் விதமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) முக்கிய நடைமுறை சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், நுகர்வோர் எளிதாகவும் விரைவாகவும் தங்கள் இணைப்பின் பெயரை மாற்றிக் கொள்ள வழி வகுக்கிறது.
கட்டணம் மற்றும் ஆன்லைன் சேவை :
தாழ்வழுத்தப் பிரிவு (LT) வீட்டு மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றக் கட்டணம் தற்போதைய நிலவரப்படி ரூபாய் 645 ஆகும். (இந்த கட்டணங்கள் திருத்தப்பட வாய்ப்புள்ளது). மிக முக்கியமாக, தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது இந்தப் பெயர் மாற்ற சேவையை முழுவதுமாக ஆன்லைன் சேவைக்கு மாற்றியுள்ளது. இதனால், பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. TANGEDCO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலேயே விண்ணப்பத்தை சமர்ப்பித்து, முழு செயல்முறையையும் முடிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் :
சொத்துக்கான ஆதாரங்கள் : விற்பனைப் பத்திரம், பரிசுப் பத்திரம், குத்தகை ஒப்பந்தம் அல்லது சமீபத்திய சொத்து வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம்.
விண்ணப்ப தேவைகள்: விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை மற்றும் முந்தைய உரிமையாளரின் கடைசி மின் கட்டண ரசீது தேவை.
வாரிசுதாரர் மாற்றம் : முந்தைய உரிமையாளர் மறைந்திருந்தால், இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதுமானது. குடும்பத்தில் பெயர் மாற்றும் போது, வாரிசு சான்றிதழ் அல்லது சொத்து வரி ரசீதை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
விதிமுறை நீக்கம் :
பெயர் மாற்ற செயல்முறையை மேலும் எளிதாக்கும் வகையில், முந்தைய உரிமையாளரிடம் இருந்து பெறப்பட வேண்டியிருந்த படிவம் 2 (Form 2) ஒப்புதல் படிவத்தை இனி நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என்று மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இது நுகர்வோருக்கு அளிக்கப்பட்ட ஒரு பெரிய நிவாரணமாகும். மேலும், சொத்து விற்பனை அல்லது பரிசாக வழங்கும் சந்தர்ப்பங்களில், ஒப்பந்த கடிதம் போன்ற கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
Read More : உலகின் முதல் பணமில்லா நாடாக மாறிய ஸ்வீடன்..!! ரொக்கப் பரிவர்த்தனையே கிடையாதாம்..!!












