இந்தியாவில், தேநீர் இல்லாமல் பலருக்கும் காலைப்பொழுது விடியாது. டீ என்பது ஒரு புத்துணர்வூட்டும் பானமாக நிறைய பேரின் வாழ்வில் இடம்பிடித்துவிட்டது. குறிப்பாக காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் டீ குடிப்பது, ஒரு பழக்கமாகவே பலரிடையே இருந்து வருகிறது. வேலைக்குச் சென்றாலும், பள்ளி அல்லது அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாலும் ஒரு சிப் டீ இல்லாமல் அன்றைய நாள் தொடங்காது.
ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா..? பெரும்பாலும் நாம் எதையும் சாப்பிடாமல் டீ அருந்துகிறோம். பின்னர் நாள் முழுவதும் எடை அதிகரிப்பு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
பிரபல மருத்துவர் தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, ”டீயில் காஃபின் மற்றும் டானின்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இந்த டீயை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடலில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது வயிற்றில் அமில உற்பத்திக்கு வழிவகுக்கும். இதனால், நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகளை உண்டாகும்.
மேலும், இது செரிமானத்தை மெதுவாக்கும். பொதுவாக, டீ என்பது நீரிழப்பு ஏற்படுத்தும் பானம் ஆகும். அது உங்கள் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும். வெறும் வயிற்றில் டீ குடிப்பது என்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் மெதுவாக்கும். இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட அவ்வளவு எளிதில் எடையை குறைக்க முடியாது.
வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அல்சர் போன்ற பிரச்சனைகளும் வரும். சிலருக்கு அதிக மன அழுத்தம், கவலை, நடுக்கம், பதட்டம் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு நாளைக்கு அதிகமான டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். பால் சேர்க்கப்பட்ட டீ, கறுப்பு டீ-யை விட சிறிது பாதுகாப்பாக இருக்கும். மேலும் அதில் இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்துக் குடித்தால் நல்லது.
எனவே, காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைப் பழம் கலந்து குடிக்கலாம். டீ குடிப்பதற்கு முன் ஊறவைத்த பாதாம் அல்லது வாழைப்பழம் போன்ற லேசான உணவை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நாம் தினசரி பழக்கமாக செய்வது தான் உடலையும், வாழ்வையும் வடிவமைக்கிறது. அதில் சிறிய மாற்றமே ஒரு பெரிய நன்மைக்கு வழிவகுக்கும். உங்கள் பழக்கங்களை ஒரு முறையேனும் கேள்வி கேளுங்கள். அது இன்றில்லை. என்றாவது ஒருநாள் மாற்றத்தின் முதல் படியாக மாறும்.
Read More : உங்களுடன் ஸ்டாலின்.. பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ்.. இனி எங்கும் அலைய வேண்டாம்..
Leave a Reply