பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்.. இனி ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்யக் கூடாது..

நிலம் மற்றும் சொத்துகளுடன் தொடர்புடைய பணிகள் அனைத்துக்கும் அதாவது, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ், சங்க பதிவு உள்ளிட்டவை சார் பதிவாளர் அலுவலகம் மூலமாகத்தான் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இத்துறையாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும், பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் 585 இடங்களில் இத்தகைய அலுவலகங்கள் பொதுமக்களுக்கு சேவையளித்து வருகின்றன. சொத்து விற்பனை/வாங்குதல், திருமணப் பதிவு, நிறுவனங்கள் பதிவு போன்ற அனைத்து ஆவணங்களும் இந்த அலுவலகங்களில்தான் பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தான், சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கும் மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனென்றால் வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகம் நிகழ்கிறது. இதில் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சொத்து பரிமாற்றத்தின்போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில் ரூ.20,000-க்கும் மேலான ரொக்கப் பணத்திற்கு அனுமதியில்லை என்ற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களில் பத்திரங்களில் அதிக தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக குறிப்பிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது என்றும் அப்படி ஏதாவது நடந்தால், உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத்துறைக்கு, உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, அனைத்து சார் பதிவாளர்களும், இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மேலும், இதில் கவனக்குறைவாக செயல்படும் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

Read More : LIC-இன் இந்த திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.7,000 கிடைக்கும்.. பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *