எலும்பு தேய்மானம், மூட்டுச் சிதைவு..!! பிசியோதெரபி பலனளிக்குமா..? மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்..!!

எலும்பு மற்றும் மூட்டுச் சிதைவு என்பது உடலின் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் காலப்போக்கில் தேய்ந்து சிதைந்து போவதை குறிக்கிறது. இதனால் வலி, மூட்டுகளில் விறைப்பு மற்றும் உடலின் இயக்கம் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக வேலை பார்ப்பது அல்லது வேலையே செய்யாமல் இருப்பது என இரண்டுமே இந்த தேய்மானத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மும்பையில் உள்ள கே.ஜே. சோமையா பிசியோதெரபி கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹினா ஜெயின் இது குறித்து பேசுகையில், ”தேய்மானத்தால் ஏற்படும் ஆரம்பகால மூட்டுவலி பொதுவாக இடுப்பு மற்றும் முழங்கால்கள் போன்ற எடை தாங்கும் மூட்டுகளையே முதலில் பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கும், அதிகச் சுமை தாங்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இது முன்கூட்டிய மூட்டுச் சிதைவுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை முறையால் அதிகரிக்கும் பாதிப்பு :

எலும்புச் சிதைவு பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் உடலியல் காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உட்கார்ந்தே இருக்கும் பழக்க வழக்கங்கள், மோசமான உணவுத் தேர்வுகள், போதுமான சூரிய ஒளி இல்லாமை, சரியான உடற்பயிற்சி இல்லாமை மற்றும் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தம் போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இந்த தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர் கூறுகிறார்.

மூட்டு வலி, மூட்டுகளில் விறைப்பு, இயக்கம் குறைதல், வீக்கம், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் சத்தம் ஏற்படுவது ஆகியவை மூட்டுச் சிதைவின் முக்கிய அறிகுறிகள் ஆகும். தற்போது இந்த தேய்மானம் 30 வயதிலேயே தோன்றத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பிசியோதெரபி :

ஆரம்ப கால மூட்டுச் சிதைவைத் தடுக்க மருந்துகள் அல்லாத தலையீடுகளே மிக அவசியம் என்று டாக்டர் ஹினா ஜெயின் வலியுறுத்துகிறார். தினமும் நடைபயிற்சி, சரியான உடற்பயிற்சிகளை செய்தல், உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தல் ஆகியவை தேய்மானத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிசியோதெரபி சிகிச்சை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

சிகிச்சை முறை : வலிமை பயிற்சி, எடை தாங்கும் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் மூலம் செய்யப்படும் பிசியோதெரபி, விரைவாகக் குணமடைய உதவுகிறது.

தடுப்பு முறை : எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மானத்தின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே பிசியோதெரபியைத் தொடங்கினால், எலும்பு சிதைவை தாமதப்படுத்தலாம் அல்லது முற்றிலும் தடுக்கலாம்.

முக்கியத்துவம் : எலும்பு மற்றும் மூட்டுச் சிதைவு ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்குப் பிசியோதெரபியே முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வலியை கட்டுப்படுத்தி, உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்தப் பிசியோதெரபிப் பயிற்சிகள் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் இயக்கத்துடன் தொடங்குவதால், தேய்மானத்தை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறுகிறார்.

Read More : இனி உங்கள் கேஸ் இணைப்பை ரத்து செய்யாமல் வேறு நிறுவனத்திற்கு மாறலாம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!