தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முக்கிய துறைகளில் ஒன்று பத்திரப்பதிவுத்துறை. இந்த சூழலில் தான், நிலம் தொடர்பான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், ஆன்லைனில் பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பட்டா மற்றும் சிட்டா
பட்டா என்பது ஒரு நிலத்தின் மீது ஒருவருக்கு உள்ள உரிமையை நிரூபிக்கும் ஆவணம். இந்த ஆவணம் வருவாய் துறையால் வழங்கப்படுகிறது. இதில் பட்டா எண், உரிமையாளர் பெயர், சர்வே எண், மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் நிலத்தின் வகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதேபோல், சிட்டா என்பது பட்டாவின் ஒரு பகுதியாகும். ஒரு நிலம் எங்கு அமைந்துள்ளது, அதன் அளவுகள் என்ன, அது நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா போன்ற விவரங்களை கொண்டிருப்பது தான் சிட்டா. இந்த ஆவணங்களை நிலத்தின் உரிமையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
நத்தம் நிலம் மற்றும் புதிய சர்வே எண் :
அதேபோல் கிராமப் புறங்களில் குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் கிராம நத்தம் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகை நிலங்களுக்கு இதுவரை மேனுவல் முறையில் தான் பட்டாக்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஒரே சர்வே எண், நத்தம் நிலத்திற்கும், பட்டா நிலத்திற்கும் இருக்கும் நிலை உருவானது. ஆனால் தற்போது, நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யும்போது, தேவையான இடங்களில் புதிய சர்வே எண்களை ஒதுக்குமாறு வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இனி, அனைத்து நிலங்களுக்கும் தனித்தனி சர்வே எண்கள் ஒதுக்கப்படும்.
ஆன்லைன் சேவைகள் :
தமிழ் நிலம் என்ற தகவல் தொகுப்பின் கீழ், அனைத்து நில ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் நத்தம் நிலம் உட்பட அனைத்து வகை நிலங்களுக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை இனி ஆன்லைனிலேயே பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி ஆவணங்களை பெறுவதற்கான கால தாமதம் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிலம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஆன்லைனில் இருப்பதால், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
பட்டா பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு மட்டும், தற்போது வரை தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இதுவும் எளிதாகும் என்று கூறப்படுகிறது.
Read More : தமிழ்நாடு அரசு வேலை..!! 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!