எடப்பாடியில் மாணவிகளிடம் சில்மிஷம்.. புகாரை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் பாய்கிறது நடவடிக்கை..

எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்து கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், உடைந்தையாக இருந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வந்த தமிழ் ஆசிரியர் செந்தில் குமரவேல் (58), மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் உடனே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியர் செந்தில் குமரவேல் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மாணவிகள் புகாரளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை சீதா (54), உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி (41), மல்லிகா (55), உடற்கல்வி ஆசிரியை விஜி (46) ஆகியோர் மீதும் போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாலியல் புகாரில் கைதான செந்தில் குமரவேலை சஸ்பெண் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”கைது செய்யப்பட்டுள்ள செந்தில்குமரவேல், ஓராண்டுக்கும் மேலாக மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாணவிகள் இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை சீதாவிடம் புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பள்ளியின் புகார் பெட்டியில் போட்ட கடிதத்தையும் உடற்கல்வி ஆசிரியை விஜி கிழித்துப் போட்டுள்ளார். இந்த விவகாரம் உதவி தலைமை ஆசிரியைகளுக்கும் தெரிந்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரும், அதனை மறைத்த ஆசிரியைகளும் உறவினர்கள்.

இதனால் திட்டமிட்டே மாணவிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.

Read More : பிஸ்கட் உண்மையிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா..? பெற்றோர்களே கட்டாயம் இதை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *