கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வைத்த செக்..!! பிரியாணி கிடைப்பதில் சிக்கல்..?

தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே, பிரியாணி கடைகளில் கூட்டம் அலைபோதும். அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்காக டஜன் கணக்கிலான பிரியாணியை ஆர்டர்கள் செய்வது வழக்கம். கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு, டோக்கன் மூலம் பிரியாணி பாக்கெட்டுகள் வழங்கப்படுவதோடு, அந்த டோக்கனை குறிப்பிட்ட கடைகளில் காண்பித்தும், பிரியாணியை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 40,000 கறிக்கோழி பண்ணைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகள், கோழி உற்பத்திக்குப் புகழ்பெற்றவை. இப்பகுதிகளில் மட்டும் சுமார் 25,000 பண்ணைகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இங்கிருந்து தினசரி சராசரியாக 15 லட்சம் கறிக்கோழிகள் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதன்படி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் இங்குள்ள கறிக்கோழிகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. ஆனால், கூலி உயர்வு, பராமரிப்பு செலவின் மேம்பாடு, நோய்கள் தாக்கம், கடும் வெப்பம் போன்ற சிக்கல்களால் சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிய கோழிப் பண்ணைகள் அமைப்பது குறைந்துள்ளது.

இதனால், கோழிப்பண்ணை துறையில் முதலீடு செய்ய பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கினால், கோழிப்பண்ணை தொழில் மீண்டும் வளர்ச்சி பெறும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அதேபோல், கறிக்கோழி வளர்ப்புக்கான கூலி, தற்போது கிலோவுக்கு ரூ.6.50 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.15ஆக உயர்த்தப்பட வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்தல், பண்ணைகளுக்கு கட்டணமின்றி மின்சாரம் வழங்குதல், ஆண்டுதோறும் சரியான விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளும் வைத்துள்ளனர். இவ்வாறு மொத்தம் 10 அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகள் தற்போது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட சென்னை எழும்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, “ஒவ்வொரு ஆண்டும் வளர்ப்பு கூலியை நிர்ணயிக்கும் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக 2013-ஆம் ஆண்டு அரசு உறுதி அளித்திருந்தாலும், இதுவரை கூட்டம் நடைபெறவில்லை.

முன்பு ஆண்டுக்கு 6 முறை கோழிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 3 முறை மட்டுமே வழங்கப்படுவதால், விவசாயிகள் வாங்கிய கடன்களைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் ஜனவரி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 40,000 கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களையும் ஒருங்கிணைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதன் விளைவாக மாநிலம் முழுவதும் இறைச்சி கடைகளில் கோழிக்கறி கிடைக்காது. தேர்தல் காலத்தில் சிக்கன் பிரியாணிக்கும் சிக்கல் உண்டாகும்” என எச்சரித்தார்.

Read More : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 470 + காலியிடங்கள்..!! எந்த தேர்வும் எழுத தேவையில்லை..!!