தற்போதைய காலகட்டத்தில் பலரும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், உறுதியான வருமானத்துடன் கூடிய ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம். இத்திட்டத்தை தபால் நிலையம் அல்லது அரசு வங்கிகளில் தொடங்கலாம். இத்திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள். ஆனால், முதிர்ச்சி காலம் முடிந்ததும் 5 ஆண்டுகள் என எத்தனை முறை வேண்டுமானாலும் திட்டத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு 3 வகையான வரிச் சலுகைகள் கிடைக்கும். முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சியின் போது கிடைக்கும் மொத்த தொகை வரி விலக்கு உண்டு.
உதாரணத்திற்கு, நீங்கள் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்தால், ஆண்டு முதலீடு ரூ.12,000 ஆக இருக்கும். இதுவே 15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கணக்கை இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.3 லட்சமாக இருக்கும். தற்போதைய 7.1% வட்டியின்படி, 25 ஆண்டுகால முடிவில் உங்களுக்கு வட்டி மட்டுமே ரூ.5,24,641 கிடைக்கும். இதன் மூலம், உங்கள் முதிர்வுத் தொகை ரூ.8,24,641 ஆக இருக்கும்.
PPF கணக்கை நீட்டிக்க இரண்டு வழிகள் :
நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து கணக்கை நீட்டிக்க விரும்பினால், முதிர்வு தேதியில் இருந்து ஓராண்டுக்குள் உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கலாம். அதேபோல், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றாலோ அல்லது கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி பெற விரும்பினாலோ எந்த விண்ணப்பமும் சமர்ப்பிக்க தேவையில்லை. 15 ஆண்டுகள் முடிந்ததும், முதலீடு செய்வதை நிறுத்திவிட்டாலே உங்கள் ‘பங்களிப்பு இல்லாத நீட்டிப்பு’ நிலைக்கு மாறிவிடும். கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
Read More : தும்மலை அடக்கினால் என்ன ஆகும்..? இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆபத்து..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!