கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என உறுதி அளித்தார். விழாவில் பேசிய அவர், “பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை, அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம், ஆனால் திமுக அரசின் அடையாளம் சமூக நீதி” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது, கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.73 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் உரிமைத் தொகைக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களைப் பரிசீலித்து, விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிருக்கு புதிய விலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பெண்கள், மற்ற ஓய்வூதியத் திட்டங்களைப் பெறும் பெண்கள் ஆகியோரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ பரிசீலிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : மக்களை சந்திக்கிறார் விஜய்..!! உங்கள் மாவட்டத்திற்கு எப்போது வருகிறார்..? சுற்றுப்பயண விவரம் வெளியானது..!!