வேலைப்பளு, காலைப் பசியின்மை அல்லது எடை குறைப்பு குறித்த தவறான நம்பிக்கை போன்ற காரணங்களால் பலரும் இன்று உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பது அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உணவுத் தவிர்ப்பு, உங்கள் உடலில் இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவைச் சீராக நிர்வகிக்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை என்பது ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் நாம் உணவு உண்ணும் நேரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த மிக முக்கியச் செயல்முறையாகும்.
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலில் உள்ள குளுக்கோஸ் சமநிலை சீர்குலைந்து, ஆற்றல் வெகுவாகக் குறைகிறது. அதன் விளைவாக, அடுத்த வேளை உணவு உண்ணும்போது குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கிறது. இடைப்பட்ட உண்ணாவிரதம் முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் சில நன்மைகளை வழங்க முடியும். ஆனால், திட்டமிடப்படாத அல்லது சீரற்ற முறையில் உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது.
ஆய்வுகளின்படி, காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவு உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவை அதிகமாகக் கூட்டுவதாக தெரிய வந்துள்ளது. மதிய உணவு அல்லது இரவு உணவைத் தவிர்ப்பதும் இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கும் என்றாலும், காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இன்சுலின் உணர்திறன் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டத்தைப் பாதிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்க மிகவும் எளிதான வழி, சீரான உணவு அட்டவணையைப் பராமரிப்பதேயாகும். அவ்வப்போது உணவுகளைத் தவிர்ப்பது பெரிய தீங்கு விளைவிக்காது என்றாலும், தொடர்ந்து நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, குளுக்கோஸ் சமநிலையைப் பராமரிக்கும் உடலின் திறனைக் கடினமாக்குகிறது.
காலை உணவு அவசியம் : அன்றைய நாளை தொடங்கும்போது புரதம் (Protein) மற்றும் நார்ச்சத்து (Fiber) நிறைந்த காலை உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தும். இது பசியைக் கட்டுப்படுத்தவும், உணவுக்குப் பிந்தைய குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்தவும், பிற்பகலில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.
சீரான உணவு முறை : சாதாரணமாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் தனியாகச் சாப்பிடும்போது, அவை விரைவாகச் செரிமானமாகி இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இவற்றுடன், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அல்லது அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது செரிமானத்தின் வேகத்தைக் குறைத்து, குளுக்கோஸ் படிப்படியாக வெளியேறுவதை ஊக்குவித்து, நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.
இரவு நேர உணவுப் பழக்கம் : ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் குறைவான கால இடைவெளிக்குள் உணவை உட்கொள்வது, மேம்பட்ட வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். இரவு தாமதமாக உணவை உட்கொள்வது குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மோசமாக்கி, இருதய வளர்சிதை மாற்ற அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே, இரவு உணவுக்கும் தூக்கத்திற்கும் இடையில் சில மணிநேரங்கள் இடைவெளி விடுவது, ஆரோக்கியமான இரவு நேர இரத்த சர்க்கரை அளவுகளைப் பராமரிக்க மிகவும் அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சீரான உணவைச் சரியான நேரத்தில் சாப்பிடுவது, குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்தவும், சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கவும் உதவுகிறது. இது நிலையான ஆற்றல், மேம்பட்ட கவனம் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சிறந்த வழியாகும்.















