இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நேரமின்மை, செலவுகள் அதிகரிப்பு மற்றும் சுலபமான உணவுத் தேவை போன்ற காரணங்களால், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்பது பெரும்பாலானோரின் அன்றாட உணவுகளில் சேர்ந்துவிட்டது. ஆனால், இது உடலுக்குப் பயனா..? அல்லது பாதகமா..? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.
குழந்தைகள், மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என பலரும் நூடுல்ஸை அதிகம் விரும்பு சாப்பிடுகின்றனர். மேலும் இதை வெறும் 5–10 நிமிடங்களில் சமைத்துவிடலாம். ஆனால், நூடுல்ஸ் தினசரி உணவாக மாறும்போது, என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஒரு நிமிட உணவாக இருந்தாலும், ஊட்டச்சத்து என்பது மிகக் குறைவாக உள்ளது. இந்த நூடுல்ஸ்கள் பெரும்பாலும் மைதா அல்லது ரீபைன்ட் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள மசாலா பொடியில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது.
ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டில் சுமார் 600 mg முதல் 1,500 mg வரை சோடியம் இருக்கும். இது ஒரு நாளுக்கே பரிந்துரைக்கப்படும் பொதுவான சோடியம் அளவின் (2300 mg) அரைப் பங்குக்கும் மேற்பட்ட அளவாகும். தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக சிக்கல்கள், இருதய பிரச்சனைகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
நூடுல்ஸில் புரதத்தின் அளவு மிகக் குறைவாக உள்ளது. மேலும், உடல் வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும், பசியை நீண்ட நேரம் அடக்க முடியாது, செரிமானத்திற்கு தேவையான சத்துகளும் நூடுல்ஸில் கிடையாது. மேலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், B காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்றவை குறைவாகவே இருக்கின்றன. இது சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மனஅழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
எனவே, வீட்டில் சமைக்கும் போது நூடுல்ஸில் முட்டை, பன்னீர், இறைச்சி, நிறைய காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். அதனுடன் வரும் மசாலா பொடியை முழுவதும் சேர்க்காமல், பாதி அளவு மட்டும் பயன்படுத்தலாம். MSG-இல் குறைவான அல்லது Whole Wheat நூடுல்ஸ்களை தேர்வு செய்ய முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு முழுமையான உணவாக நூடுல்ஸ் வழங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நூடுல்ஸ் சில நேரங்களில் மாற்று உணவாக பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், தினசரி உணவாக எடுத்துக் கொண்டாலோ அல்லது அடிக்கடி சாப்பிட்டாலோ நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம். நீங்கள் உணவு தேர்வு செய்யும் பொழுது, சுவைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நன்மை தருகிறதா..? என்பதையும் கூட யோசித்து பாருங்கள்.
Read More : உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 கிடைக்கும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!