தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் தான், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிதி அமைப்பில் புதிய பரிவர்த்தனை நடைமுறைகளை ஏற்படுத்துவதற்காக இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பலரும் யுபிஐ-யை பயன்படுத்தி பணம் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.24.85 லட்சம் கோடியாகும். அதேபோல், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 1,490 கோடியில் இருந்து 34% உயர்ந்து 2,001 கோடியாக உள்ளது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை மற்றும் மக்களின் பயன்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
இந்நிலையில் தான், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி தனிநபர்கள் வணிக ரீதியாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல், பயண முன்பதிவுகள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்ற பெரிய தொகைகளை ஒரே நேரத்தில் செலுத்த முடியும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதேபோல், கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் மற்றும் மாதாந்திர தவணைகளுக்கு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு தனிநபர், தனது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு தனிநபரின் கணக்கிற்கு அனுப்பும் பணத்திற்கான வரம்பு ரூ.1 லட்சமாக தொடர்கிறது. கல்வி மற்றும் மருத்துவக் கட்டணங்களுக்கான பரிவர்த்தனை வரம்பும் ரூ.5 லட்சமாக தொடர்கிறது. யுபிஐ மூலம் நகைகள் வாங்குவதற்கு, ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை செலுத்த முடியும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் பெரிய தொகைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக பரிவர்த்தனை செய்ய உதவும். இது வணிகம் மற்றும் தனிநபர் நிதி மேலாண்மையை மேலும் எளிதாக்கும் வகையில் உள்ளது. இந்த புதிய நடைமுறைகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேலும் விரிவுபடுத்துவதோடு, மக்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : கடனுதவி வேண்டுமா..? இனி இ-சேவை மையம் மூலமே விண்ணப்பிக்கலாம்..!! புதிய வசதியை தொடங்கிய தமிழ்நாடு அரசு..!!