கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதியில் நீர் வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவி மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவிக்குச் செல்லவும், படகுப் பயணத்திலும் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கும் இப்போதைய நீர்வரத்து விநாடிக்கு 20,338 கன அடியாக பதிவாகியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக, மேல் நிலப் பகுதிகளில் வெள்ள நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசின் கீழ் உள்ள அணைகளில் நீர்திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் (Krishna Raja Sagara) அணையிலிருந்து நீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால், தமிழ்நாட்டிற்கான காவிரி நீர்வரத்து 1 லட்சம் கன அடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாகக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் காவிரியை ஒட்டியுள்ள குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?