இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாய உள்கட்டமைப்பு நிதி என்ற சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள ரூ.2 கோடி வரை கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம்.
இந்தக் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தனிப்பட்ட விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய அமைப்புகளுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. விவசாய தொழில்முனைவோர், விவசாய குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என பலரும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
என்னென்ன தொழில்கள் செய்யலாம்..?
மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.2 கோடி கடனுதவியை வைத்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, காய்கறி நாற்றங்கால் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு, பசுமைக்குடில், சேமிப்புக் கிடங்குகள், விளைபொருட்களை தரம் பிரிக்கும் இயந்திரங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட தொழில்களை தொடங்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி..?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் http://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்பத்தை ஒரு விரிவான திட்ட அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, அந்த திட்ட அறிக்கையை அருகிலுள்ள வங்கிக் கிளைகளிலும் கொடுக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை, நபார்டு வங்கி, கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட தொழில் மையங்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் வீட்டிற்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வர வேண்டுமா..? விண்ணப்பிப்பது எப்படி..?