சென்னை மெரினாவில் சிக்கன் ரைஸ், மீன் சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி மகேந்திரன். இவரது மனைவி பதுமேகலா. இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (வயது 6) என்ற மகள் உள்ளார். இவர், தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரன் கல்லீரல் பிரச்சனையால் தவித்து வருகிறார்.
இதனால், அவர் சென்னை வடபழனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் அவரது மனைவி பதுமேகலாவும் வசித்து வருகிறார். ஆனால், இவர்களுக்கு மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டிலேயே அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரின் தாய் பதுமேகலா, சஞ்சனா ஸ்ரீயை மெரினா பீச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது தாயிடம் பொறித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கித் தருமாறு சஞ்சனா ஸ்ரீ கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதை மகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்ததும் சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால், வீட்டிலிருந்த மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்துள்ளனர்.
ஆனால், மறுநாள் காலையில் மகளை எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சிறுமியின் வாய், மூக்கில் இருந்து ரத்தம் கசிந்திருந்ததால், உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான் உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : இந்தியன் வங்கியில் 170 + காலியிடங்கள்..!! மாதம் ரூ.64,820 சம்பளம்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!!