திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் உச்ச நிகழ்வுகளான பரணி மற்றும் மகா தீபத்தை நேரடியாகக் கருவறையில் இருந்து தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் வழியே வெளியிடப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுகளைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டுகளைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் மற்றும் அனுமதி விவரங்களை தற்போது பார்ப்போம்.
டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை பரணி தீபத்திற்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்ட உள்ள நிலையில், இதற்கு கட்டணம் ரூ.500 மற்றும் ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 600 கட்டணத்தில் 100 பேர், ரூ. 500 கட்டணத்தில் 1,000 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணச் சீட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பதிவு செய்யப் பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பரணி தீபம் தரிசன நேரம்: டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 3.00 மணி வரை ராஜகோபுரம் திட்டிவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மகா தீபம் தரிசன நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ராஜகோபுரம் திட்டிவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குத் தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மலையேற தடை :
தீபத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் பக்தர்கள் மலை ஏற மீண்டும் ஒருமுறை தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் காரணமாகத் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்கு மற்றொரு முக்கியக் காரணம், இந்தியப் புவியியல் ஆய்வு மைய வல்லுநர் குழு அளித்த அறிக்கை ஆகும். அந்த அறிக்கையில், மலையேறும் பாதையானது உறுதித்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட மையப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கற்பாறைகள் தளர்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு ஒன்றைக் கருத்தில் கொண்டே மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டும் பக்தர்கள் மலை ஏறத் தடை விதித்துள்ளது.
பொதுத் தரிசனம் மற்றும் தொடர்பு எண்கள் :
கட்டணமில்லாத பொதுத் தரிசனத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு: காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை ராஜகோபுரம் வழியாகப் பொதுத் தரிசனத்துக்கு அனுமதி.
மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு: இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை ராஜகோபுரம் வழியாகப் பொதுத் தரிசனத்துக்கு அனுமதி.
Read More : உங்கள் லேப்டாப் அடிக்கடி ஹீட் ஆகுதா..? வெடிக்கும் அபாயம்..!! உடனே இதை பண்ணுங்க..!!











