உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தற்போது ஒரு விவாதம் சூடுபிடித்துள்ளது. இதற்குக் காரணம், பிரபல உலக பணக்காரர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு அதிரடி கணிப்புதான். செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence – AI) மனித உருவ ரோபோக்களும் (Humanoid Robots) கட்டுக்கடங்காத வளர்ச்சி அடையும்போது, வருங்காலத்தில் மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பணம் அதன் மதிப்பை இழந்து, AI மற்றும் ரோபோக்களால் இயங்கும் ஒரு முற்றிலும் புதிய சகாப்தம் உருவாகும் என்பதே அவரது கணிப்பின் சாராம்சம்.
எலான் மஸ்க் தனது கணிப்பில், இந்த மாற்றம் இன்னும் விரைவாக, 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள்ளாகவே நிகழலாம் என்று குறிப்பிடுகிறார். “20 வருடங்களுக்குள்ளாக, வேலை செய்வது என்பது விருப்பமானதாக மட்டுமே மாறும்” என்று அவர் அடித்துக் கூறுகிறார். தற்போது பலர் பகுதி நேர வேலை செய்வதைப் போல, எதிர்காலத்தில் முழுநேர வேலை செய்வதும் ஒரு விருப்பமான செயலாகவும், பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும்.
உங்கள் தோட்டத்தில் காய்கறிகளை விளைவிப்பது அல்லது கடையில் காய்கறிகள் வாங்குவது போல, வேலையும் ஒரு விருப்பமான தேர்வாக மாறும் என்று அவர் கூறுகிறார். AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி உழைப்பின் தேவையை முழுவதுமாக நீக்கி, நீங்கள் எதை செய்ய நினைக்கிறீர்களோ, அதை அடைய முடியும் என்ற எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கணிப்பை எலான் மஸ்க் ஒருமுறை அல்லாமல், பல மேடைகளிலும் தொடர்ந்து கூறி வருகிறார். பில்லியன் கணக்கான மனிதவடிவ ரோபோக்கள் உலகை நிரப்பும். அனைத்து ஓட்டுநர் பணிகளில் 90% தானியங்கிமயமாக்கப்படும் (Automated). மிக முக்கியமாக, பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இலவசமாகவே மாறும்.
மனிதர்கள் இனி கடினமான வேலைகளைச் செய்யத் தேவையில்லை. ஏனெனில் அந்த வேலைகளை ரோபோக்கள் செய்து முடிக்கும். அந்த ரோபோக்களை கையாளுவதற்குக்கூட மனிதர்கள் தேவைப்பட மாட்டார்கள், ஏனென்றால் அந்த வேலையைக்கூட கணினியே கவனித்துக் கொள்ளும். ஆரம்ப காலங்களில் இந்த ரோபோக்களை வடிவமைத்தவர்களுக்கும் நிரலாக்கம் (Programming) செய்தவர்களுக்கும் மட்டுமே வேலை இருக்கும். ஆனால் காலப்போக்கில், அவர்கள் உருவாக்கிய ரோபோக்களே அவர்களது பணியையும் பறிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
எலான் மஸ்கின் இந்தக் கணிப்பு உலக அளவில் தற்போது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பணம் என்பது மதிப்பை இழக்கும் என்ற அவரது கூற்றுக்குப் பின்னால் ஒரு நிம்மதியான தகவலும் உள்ளது. அதாவது, இந்த மாற்றத்தால் மக்கள் கஷ்டப்பட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும், பணிகளையும் ரோபோக்களே பூர்த்தி செய்யும். மனிதர்கள் வீட்டில் மகிழ்ச்சியாகவும், ஓய்வாகவும் இருந்தால் போதும், மற்ற அனைத்தையும் ரோபோக்கள் பார்த்துக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
Read More : திமுக முன்னாள் MP வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!













