கேரள மாநிலம் திருவச்சியூர் பகுதியில் மனைவியின் உடல்நலக் குறைவை தீய சக்திகளின் தாக்கம் என கருதிய கணவர் குடும்பம், ஒரு மந்திரவாதியுடன் இணைந்து அந்தப் பெண்ணை மாந்திரீக பூஜை என்ற பெயரில் மிக கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் மாவட்டம் திருவச்சியூரைச் சேர்ந்த அகில் (26) மற்றும் அவரது தந்தை தாஸ் (55), சமீபத்தில் மருமகளுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைக்கு, பட்டினத்திட்டாவைச் சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியிடம் தீர்வு தேடினர். சிவதாஸ், சில மாந்திரீக பூஜைகள் மூலம் பெண்ணை குணப்படுத்த முடியும் என்று உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, மந்திரவாதி சிவதாஸ், அகிலின் வீட்டிற்கு வந்து சுமார் 10 மணி நேரம் பூஜை நடத்தியுள்ளார். அந்தச் சமயத்தில், மனைவியை பலவந்தமாக ஒரு இடத்தில் அமர வைத்து, அவருக்கு மதுவை அருந்தச் செய்ததோடு, பீடி சாம்பலையும் விழுங்கச் செய்துள்ளனர். அதைவிட கொடூரமாக, பெண்ணின் உடலின் பல பாகங்களில் தீயால் சுட்டுச் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மகளின் நிலையைப் பார்க்க வீட்டிற்கு வந்த அவரது தந்தை, நடந்த கொடுமையை தெரிந்துகொண்டார். உடனடியாக அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சித்திரவதைக்கு உடந்தையாக இருந்த கணவர் அகில், மாமனார் தாஸ் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : மத்திய அரசின் சோலார் திட்டம் உண்மையிலேயே பயன் தருகிறதா..? மின் கட்டணமே செலுத்த தேவையில்லையா..?














