ஆன்லைன் வங்கிச் சேவைகள் முதல் மொபைல் வாலட்டுகள் வரை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வேகம் மற்றும் வசதி காரணமாக பணம் செலுத்தும் முறை உலகளவில் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த உலகளாவிய மாற்றத்தில், ஸ்வீடன் தற்போது ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது.
அந்நாடு, உலகின் முதல் அதிகாரப்பூர்வமான பணமில்லா நாடாக (Cashless Nation) மாறியுள்ளது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்வீடனில் நடைபெறும் மொத்தப் பரிவர்த்தனைகளில் 1%க்கும் குறைவான அளவிலேயே ரொக்கப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளில் நடந்த மாற்றம் :
ஸ்வீடனில் பெரும்பாலான நிதிப் பரிவர்த்தனைகள் இப்போது கார்டுகள், மொபைல் செயலிகள் அல்லது ஆன்லைன் வங்கிச் சேவைகள் மூலம் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்படுகின்றன. ஷாப்பிங், உணவகங்களில் உணவு, நன்கொடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எதுவாக இருந்தாலும், ஸ்வீடன் மக்கள் கிட்டத்தட்ட பணத்தை சார்ந்திருப்பதை நிறுத்திவிட்டனர். இதற்கு நேர்மாறாக, 2010 ஆம் ஆண்டில் அந்நாட்டின் ரொக்கப் பரிவர்த்தனை விகிதம் சுமார் 40% ஆக இருந்தது.
கடந்த 13 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டணங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த வியத்தகு மாற்றத்தை இது காட்டுகிறது. 2000-களின் முற்பகுதியிலேயே டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நவீன வங்கி அமைப்புகளில் ஸ்வீடன் அரசு முதலீடு செய்ய தொடங்கியதுதான் இந்த வெற்றிப் பயணத்திற்கு காரணமாகும்.
75% மக்களை ஈர்த்த ‘ஸ்விஷ்’ செயலி :
ஸ்வீடனின் ரொக்கமில்லா புரட்சிக்கு பெரும் பங்காற்றியது, 2012-ஆம் ஆண்டு அந்நாட்டின் முக்கிய வங்கிகளால் தொடங்கப்பட்ட ‘ஸ்விஷ்’ (Swish) எனும் மொபைல் பேமென்ட் செயலி ஆகும். இது ஸ்வீடன் மக்கள் தொகையில் 75%-க்கும் அதிகமானோரை குறிக்கும் வகையில், 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. பில்களுக்கு பணம் செலுத்துவது முதல் தெருவோர வியாபாரிகளுக்கு கொடுப்பது வரை அனைத்திற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.
ஸ்வீடனில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் பணத்தை கையாள்வதே இல்லை. ஏடிஎம்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மேலும் பல வணிக நிறுவனங்கள் “இங்கு ரொக்கப் பணம் ஏற்கப்படாது” என்ற பலகைகளை வெளிப்படையாக வைத்துள்ளன. முதியோர்கள் இந்த டிஜிட்டல் முறைக்கு மாறுவதில் உள்ள சவால்கள் இருந்தபோதிலும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 95%க்கும் அதிகமானோர் இப்போது டெபிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் கல்வியறிவிற்கான திட்டங்கள் இந்த குழுவின் பயன்பாட்டு இடைவெளியை குறைக்க உதவியுள்ளன.
எதிர்கால திட்டம் :
ஸ்வீடனின் மத்திய வங்கியான ‘ரிக்ஸ் பேங்க்’, எதிர்காலப் பொருளாதாரத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்யவும், e-Krona எனப்படும் டிஜிட்டல் கரன்சியை முன்னோடியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொள்வதில் ஸ்வீடனைத் தொடர்ந்து நார்வே, பின்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் பணப் பயன்பாடு 5%-க்கும் குறைவாக உள்ளது. ஸ்வீடனின் இந்த வியத்தகு மாற்றம், பணமில்லா சமூகம் என்பது சாத்தியமானது மட்டுமல்ல; அது திறமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது.
Read More : ரயில் நிலையங்களில் மட்டும் ஏன் மெடிக்கல் ஷாப் இல்லை தெரியுமா..? மத்திய அரசின் அடுத்த பிளான் இதுதான்..!!













