உங்களுடன் ஸ்டாலின்.. பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ்.. இனி எங்கும் அலைய வேண்டாம்..

தமிழ்நாட்டில் வாரிசு சான்றிதழ், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது போன்ற சேவைகளை பெறுவதற்கு இனி பொதுமக்கள் இ-சேவை மையங்களுக்கோ அல்லது வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை. ஏனென்றால், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம்கள் மூலம் மேற்கண்ட பணிகளை எளிதாக்கி வீடுகளுக்கே அரசு சேவைகளை கொண்டு வந்துள்ளன.

இதுநாள் வரை வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு முதலில் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து, பின்னர் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளரை சந்தித்து இறுதியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கும் பல அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், பொதுமக்களுக்கு தேவையில்லாத பண செலவும், அலைச்சல்களும் இருந்தது.

பொதுமக்களின் இந்த சிரமங்களை போக்கும் வகையில் தான் தற்போது, “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பார்கள். இதனால், உங்களின் பல்வேறு தேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண முடியும்.

உங்களுக்கு வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைந்து இந்த முகாம்களில் சமர்ப்பிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதேபோல், பட்டா தொடர்பான திருத்தங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற சேவைகளையும் சுலபமாக ஒரே இடத்தில் முடித்துக் கொள்ளலாம்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற கோரிக்கைகள், 45 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது. வாரிசு சான்றிதழ் போன்ற சேவைகளை பெற, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் வாரிசுதாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சுய உறுதிமொழிப் பத்திரம், முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றுகள் அவசியம். எனவே, “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More : ஆடிப்பெருக்கு.. கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு வர்த்தகம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *