தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட தகுதியான பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக கடந்த 3 மாதங்களாக மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உரிமைத் தொகைக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த 28 லட்சம் விண்ணப்பங்களையும் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இவற்றில் தகுதியான பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அவர்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகையான ரூ. 1000 வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இரண்டாம் கட்டப் பயனாளிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விண்ணப்பிக்கத் தவறிய பலரும் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ பெறப்பட்ட 28 லட்சம் மனுக்களை மட்டுமே அரசு பரிசீலனைக்கு எடுத்து வருகிறது என்றும், இந்த முகாம்களில் விண்ணப்பிக்காதவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளிப்பதால், அவர்களுக்கு உடனடியாக உரிமைத் தொகை கிடைக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகங்களில் சென்று மனு அளிப்பதில் பயனில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே டிசம்பர் 15 முதல் ரூ. 1000 உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.











