எடப்பாடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்த வகையில், இப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக அங்காளம்மன் கோயில் தெரு, பழைய தபால் நிலையம் தெருவைச் சோ்ந்த செந்தில் குமரவேல் (58) பணியாற்றி வருகிறார். இவர், 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது, வகுப்பில் சில மாணவிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த ஆசிரியரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
இதையடுத்து, பொறுமையை இழந்த மாணவிகள் பெண் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098-யை தொடா்புகொண்டு பாலியல் தொல்லை குறித்து புகாரளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிந்து தலைமையிலான சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார், நேற்று (ஜூலை 31) சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேலிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், ஆசிரியா் செந்தில் குமரவேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’பாபநாசம்’ படத்தை கண்முன் நிறுத்திய சம்பவம்..!! மனைவி, மாமியாரை கொன்று தோட்டத்தில் கணவர் செய்த பயங்கரம்..!!
Leave a Reply