சேலம் விமான நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, அதிமுகவின் நிர்வாகியும் வழக்கறிஞருமான சேலம் மணிகண்டன், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்தக் கோரிக்கையை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக சி.பி. ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததாக சேலம் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சேலம் மணிகண்டன் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கடிதத்தில், சேலம் மாவட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் 1993 ஆம் ஆண்டு முதல் சிவில் விமானப் போக்குவரத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஒரு முக்கியமான தொழில்துறை மையம் ஆகும்.
எஃகு தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் துறைகள் மற்றும் ஜவுளித் தொழில்களை கொண்ட எப்போதும் வளர்ந்து வரும் மாவட்டமாக சேலம் திகழ்கிறது. பிரதமர் மோடியின் “உதான் திட்டத்தின்” கீழ் சேலத்திற்கு மீண்டும் வணிக விமானச் சேவைகள் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சேலத்தில் விரைவில் சரக்கு விமான சேவைகளும் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் இந்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆளுமைகளின் தாயகமாக சேலம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை வலியுறுத்தி, அவரது பெயரையே விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இ.பி.எஸ். அய்யா” என்று பிரபலமாக அறியப்படும் எடப்பாடி பழனிசாமி, சிலுவம்பாளையம் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். எனவே, சேலம் விமான நிலையத்திற்கு ‘Dr. Edappadi Palanisami Domestic Airport’ எனப் பெயர் வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சேலம் மணிகண்டன் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More : ரயில் நிலையங்களில் மட்டும் ஏன் மெடிக்கல் ஷாப் இல்லை தெரியுமா..? மத்திய அரசின் அடுத்த பிளான் இதுதான்..!!












