பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீடித்து வரும் தலைமைப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர் தான் தான் என்று அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பேரில், இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அன்புமணியை கட்சியின் தலைவராக அங்கீகரித்ததாக தகவல் வெளியானது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக, ராமதாஸ் தரப்பு கடும் அதிருப்தி தெரிவித்தது. தேர்தல் ஆணையமும், அன்புமணி தரப்பும் சேர்ந்து மோசடி செய்து பாமக கட்சியைப் பறிக்கப் பார்ப்பதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கட்சிப் பிரச்சனைக்குத் தீர்வு காண கோரி, பாமக சார்பில் டெல்லி ஜலந்தர் பகுதியில் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பு தொடர்ந்த இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
கட்சிக்குள் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவும் சூழலில், தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றில் இரு தரப்பினரும் கையெழுத்துப் போடுவது இயலாத காரியமாக இருக்கும். எனவே, இந்த சிக்கல் தீராமல் நீடித்தால், பாமக-வின் சின்னத்தை முடக்கி விடுவோம் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
உயர் நீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்ததன் காரணமாக பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் சின்னமே முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இரு தலைவர்களும் அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.











