கோயில் கோபுரத்தின் உச்சியில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர், கீழே இறக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை அருகே உள்ள கொடும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஆறுமுகம். சமூக ஆர்வலர் மற்றும் மாற்றுத்திறனாளியான இவர், பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு விராலிமலை பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர். இந்நிலையில் தான், சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) விராலிமலை முருகன் கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் நின்று ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் தேசியக் கொடியுடன் நின்றவாறு, கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, காவல் ஆய்வாளர் லதா மற்றும் தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள் நேரில் வந்து அவரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர் தானாகவே கீழே இறங்க ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவர் இறங்கும் போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : “பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கட்டாயம்”..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!