ஓயாத போராட்டம்.. வீடுகளில் பறந்த கருப்புக் கொடி.. குறுக்குப்பாறையூரில் குப்பைக் கழிவுகளை கொட்ட கடும் எதிர்ப்பு..

தேவூர் அருகே குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது வீடுகளில் கருப்புக் கொடியை பறக்கவிட்டு, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அரசிராமணி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட, குறுக்குபாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், அரசிராமணி பேரூராட்சி நிர்வாகம் தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை வேறு இடத்தில் இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் பெருமாள், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறுக்குபாறையூரில் கருப்பு கொடிகள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புப் கொடி பறக்கவிட்டு, எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், பச்சபாலியூர் பகுதியில் குறுக்குபாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு எதிப்பு தெரிவித்து 50 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி விவசாயிகளும் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More : தவெகவின் 2-வது மாநாட்டுக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. திடீரென தேதியை மாற்றச் சொன்ன காவல்துறை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *