தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மாத வருமானத் திட்டம் (POMIS) என்பது, மாத ஊதியம் அல்லது நிலையான வருமானம் தேவையுள்ள நபர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான சேமிப்பு வழிமுறை ஆகும். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.1.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் நபர்கள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரைதான் பணத்தை வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கால அளவு முடிந்தவுடன், முதலீட்டாளர்கள் தங்கள் அசல் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதிய கணக்கு தொடங்கி திட்டத்தை தொடரலாம்.
தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தில் இரண்டு விதமான கணக்குகள் இருக்கின்றன. தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு. தனிநபர் கணக்கில், ஒரு நபர் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். கூட்டுக் கணக்கில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளுக்கு, மாதந்தோறும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, தபால் சேமிப்புக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்தியக் குடியுரிமை பெற்ற எந்தவொரு நபரும் இந்த திட்டத்தில் கணக்குத் தொடக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக தனிநபர் கணக்கைத் திறக்கலாம். 18 வயதிற்கு குறைந்தவர்கள் (மைனர்கள்) தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்படி நியமிக்கப்பட்ட பாதுகாவலரின் மூலம் கணக்கைத் தொடக்க முடியும். இத்திட்டத்தை தொடங்க தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு, ஆதார் அட்டை, பான் கார்டு இருந்தால் போதும்.
இத்திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இந்த விகிதத்தின் அடிப்படையில் தங்கள் மாத வருமானத்தைக் கணக்கிடலாம். உதாரணத்திற்கு தனிநபர் கணக்கில் ரூ.9,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு மாத வருமானமாக ரூ.5,550 மற்றும் ஆண்டு வருமானமாக ரூ.66,600 கிடைக்கும்.
அதுவே கூட்டுக் கணக்கில் நீங்கள் ரூ.15,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மாதம் ரூ.9,250 கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1,11,000 கிடைக்கும். இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கு தொடங்கிய பிறகு, முதல் ஒரு ஆண்டு வரை அந்தக் கணக்கை மூட அனுமதி இல்லை. ஆனால், ஒரு ஆண்டு முடிந்த பின் சில நிபந்தனைகளுடன் முன்கூட்டியே மூடக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால் மொத்த முதலீட்டில் 2% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மூடினால் 1% கட்டணமாக கழிக்கப்படும். முன்கூட்டியே கணக்கை மூட விரும்பினார், இந்த கணக்கின் பாஸ்புக், விண்ணப்பப் படிவம் (கணக்கை முன்பே மூட விரும்புகிறேன் எனத் தெரிவிக்கும்) வேண்டும். இவை இரண்டும், நீங்கள் கணக்கு வைத்துள்ள தபால் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும்.
Read More : பல ஆண்டுகளாக ஒரே கேஸ் அடுப்பை பயன்படுத்துறீங்களா..? பாதுகாப்பு கிடையாது.. உடனே மாத்துங்க..!!