அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”மக்கள் பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள். பிறகு, பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள். அதாவது, திமுகவை நிராகரித்து அதிமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். அடுத்த கட்டத்தில் அதிமுகவை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள்.
ஒருகாலத்தில் தேமுதிகவுக்கு 10% வரை வாக்குகள் கிடைத்தன. ஆனால், பிறகு அவர்கள் கூட்டணியில் சென்றதும், அந்த வாக்கு விகிதம் கணிசமாக குறைந்துவிட்டது. இது கூட்டணியின் நேரடி விளைவுதான். அதேபோல் தான், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் நடந்தது. இப்போதும் மக்கள் நினைக்கிறார்கள், அதிமுகவின் உதவியுடன் திமுகவை எதிர்க்க முடியும் என்று. ஆனால், அதிமுகவே திமுகவின் மாற்று இல்லை. மக்கள் விழிக்க வேண்டிய நேரம் இது. விழித்தால்தான் மாற்றம் ஏற்படும்,
அண்ணா வழியில் பயணிப்பதாக விஜய் கூறுகிறார். அண்ணா வழியில்தான் 60 ஆண்டுகளாக திமுக பயணித்து வருகிறது. அண்ணா வழி அல்லாமல் வேறு எந்த வழியில் திமுக, அதிமுக பயணிக்கிறது. தவெக தலைவர் விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்திருக்கிறார்..? விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படாத எழுச்சியா இனி வந்துவிட போகிறது. திரை நட்சத்திரங்கள் ஒருசிலர், அவ்வப்போது அரசியலுக்கு வந்து விட்டு போவதே வழக்கம் தான்” என்று விமர்சித்தார்.
சமீபத்தில், தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு நில உரிமை வழங்கக் கோரி நூதன முறையில் சீமான் போராட்டம் நடத்தினார். அதாவது, மலைப் பகுதியில் மாடுகள் மேய்த்து சீமான், விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையிலும், போராட்டம் நடத்தப்பட்டதால், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டதா..? ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பிப்பது எப்படி..?
Leave a Reply