இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் உணவு, உடை, மொபைல், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து வீட்டுக்கே வந்து சேரும் வசதியை பெறுகின்றனர். இந்த வசதியை அனுபவிப்பதற்கு முக்கிய காரணமே டெலிவரி பணியாளர்கள் தான். அவர்கள் காலை முதல் இரவு வரை வெயில், மழை, போக்குவரத்து போன்ற சிரமங்களை தாண்டி, சரியான நேரத்திற்கு ஆர்டர் செய்த பொருட்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க கடினமாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் வேலைக்கு தகுந்த ஊதியம் இல்லாமல், தினமும் ஆபத்தான சூழலில் வேலை செய்ய வேண்டியுள்ளது. சம்பளம் குறைவாக இருக்கிறது, வேலை நேரம் நிர்ணயமில்லாமல் அதிக நேரம் உழைக்க வேண்டியுள்ளது. நேரம் தவறினால் ரேட்டிங் கிடைக்காது. மேலும், டெலிவரி ஊழியர்கள் தங்களது சொந்த வாகனத்தை பெரும்பாலும் வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் சைக்கிளில் கூட பொருட்களை டெலிவரி செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான், ஆன்லைன் பொருட்களை விநியோகிக்கும் தொழிலாளர்கள், மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயலாளர் வீரராகவ ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “தமிழக சட்டசபையில் கடந்த 14.3.2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், ‘‘ஆன்லைன் பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது.
இதில், பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் 2,000 பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் அனுப்பியுள்ளார்.
அதில், ஆன்லைன் டெலிவரி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இதை அரசு பரிசீலித்து ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிடுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்.. இனி ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்யக் கூடாது..
Leave a Reply