சமீப காலமாக நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “நாய் கடியால் பரவக்கூடிய ‘ரேபிஸ்’ (Rabies) எனும் வைரஸ், சிகிச்சை இல்லாமல் விட்டுவிட்டால், மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்” என்று எச்சரித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், நாய்கள் கடித்தால் மட்டுமல்ல பூனை, எலி, பல்லி, கிளி, குரங்கு போன்ற விலங்குகள் கடித்தாலும் சில நேரங்களில் பாதிப்புகள் மற்றும் ஆபத்தான நோய்கள் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பூனை : பூனை உங்களை கடித்தாலோ அல்லது கீறல் பட்டாலோ பார்டோனெல்லா ஹென்சீலே எனப்படும் பாக்டீரியா உடலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும், பசியின்மை, உடல் வலி, வெப்பம், வீக்கம் போன்ற அறிகுறிகள் உருவாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தாக இருக்கலாம். எனவே, பூனை உங்களைக் கடித்துவிட்டால், அந்த இடத்தை சோப்பு போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு கழுவ வேண்டும். பிறகு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
குரங்கு : குரங்கு உங்களைக் கடித்தால், ரேபிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 15 நிமிடங்கள் நன்கு கழுவி, பின்னர் மருத்துவரை அணுக வேண்டும்.
பல்லி : பொதுவாக அனைவரது வீடுகளிலுமே பல்லிகள் இருக்கும். ஆனால், சில விஷப் பல்லிகள் உங்களைக் கடித்தால் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பல்லி கடித்து உங்களுக்கு காய்ச்சல், சிவப்பு கோடுகள் இருந்தால், அவை தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரை சந்திப்பது அவசியம் ஆகும்.
எலிகள் : எலிகளுக்கு மிகவும் வலுவான பற்கள் இருப்பதால், அவை உங்களை கடிக்கும்போது ஆழமாக இருக்கும். எலி கடிப்பதால் ரேபிஸ் வைரஸ் ஏற்படாது. ஆனால், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் உங்கள் உடலில் பரவக்கூடும். இதனால் காய்ச்சல், வாந்தி, தலைவலி, தசை வலி, மூட்டுகளில் வீக்கம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். எலி கடித்தால் கடுமையான பாதிப்புகள் இருக்காது என்றாலும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
கிளி : கிளி கடித்தால் கூட பாக்டீரியா பரவும். இது சிட்டகோசிஸ் அல்லது பாஸ்டுரெல்லோசிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். சிட்டகோசிஸ் என்பது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு பாக்டீரியா ஆகும். கிளி ஒரு மனிதனைக் கடித்தால், அவருக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும்.