தமிழ்நாட்டின் மாநில மரமாக பனை மரம் விளங்கி வருகிறது. இந்த பனை மரங்களை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி பனை மரங்களை வெட்ட வேண்டும் என்றால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் வெட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு, செங்கல் சூளைகள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே பனை மரங்களை வெட்ட முடியும். மேலும், இதற்கான அனுமதியை உழவர் செயலி மூலம் விண்ணப்பித்துப் பெற வேண்டும். ஒரு பனை மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அதற்கான அனுமதியை பெற வேண்டும்.
பனை மரம் :
பனை மரம், ‘நீர்நிலைகளின் நண்பன்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆழமான வேர்கள் மண் அரிப்பை தடுப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது. ஏரி, குளக்கரைகளில் பனை மரங்களை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்கு அவசியமானது. பனை மரத்தின் அனைத்துப் பொருட்களும் மனித பயன்பாட்டுக்கு உதவுகின்றன.
பனை நுங்கு, பதநீர், பனங்கிழங்கு ஆகியவை ஆரோக்கியமான உணவுகளாக பார்க்கப்படுகிறது. பனை ஓலைகள் கூரைக்கும், பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பனை நார், கயிறு தயாரிப்புத் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்பு, பனை மரங்களைப் பாதுகாத்து, அதன் மூலம் சுற்றுச்சூழலையும், பனை சார்ந்த தொழில்களையும் காக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ஜிஎஸ்டி வரி..!! ரூ.1 லட்சத்திற்கு மேல் குறையும் மாருதி சுஸுகி கார்களின் விலை..!! வாடிக்கையாளர்கள் ஹேப்பி..!!