பல பொருட்களின் விலை அதிரடியாக குறைகிறது..!! இனி இதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது..!! லிஸ்ட் இதோ..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நாட்டின் வரி விதிப்பு முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு, இனி இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளது. இந்த ஜிஎஸ்டி மாற்றம் வரும் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய ஜிஎஸ்டி மாற்றத்தின்படி, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், சுண்டல், பனீர், ரொட்டி மற்றும் இந்திய பிரட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்களுக்குப் பயன்படும் நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள் மற்றும் வரைபடங்களுக்கான 12% வரியும், அழிப்பானுக்கான 5% வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சுகாதாரத் துறையிலும் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தரும்.

அதேபோல், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறையவுள்ளன. தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, டூத் பிரஷ் மற்றும் ஷேவிங் கிரீம் மீதான 18% ஜிஎஸ்டி, 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய் மற்றும் பாலாடைக்கட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளது.

மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, சாக்லெட் மற்றும் பிஸ்கெட் மீதான வரிகளும் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் பல்வேறு அடுக்குகளில் இருந்து 5% என்ற ஒரே சீரான வரிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், நுகர்வோரின் செலவுகளைக் குறைத்து, அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடக் கூடாதா..? உண்மை என்ன..?