‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்களை தொடர்ந்து சிறந்த மருத்துவ சேவை மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை முன்பே கண்டறியும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுவாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் வகையில், முழு உடல் பரிசோதனை செய்து வருகின்றனர். இதற்கு சில தனியார் மருத்துவமனைகள் ரூ.10,000 வரை கூட வசூலிப்பார்கள். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000 வரை செலவாகும். அதே நேரத்தில் முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு “நலம் காக்கும் ஸ்டாலின்”திட்டத்தின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், இருதயவியல், மகப்பேறு, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், மகளிர் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என ஆண் – பெண் இரு பாலருக்கும் புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையும் இந்த முகாம்கள் மூலம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள், தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று என்கிற வகையில் 1,164 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஓராண்டு காலத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளை பெற்று உடல் நலனை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More : உங்களுடன் ஸ்டாலின்.. பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ்.. இனி எங்கும் அலைய வேண்டாம்..
Leave a Reply