இன்றைய காலகட்டத்தில், ஒரு தனிநபரின் அடையாள அட்டையாக ஆதார் கார்டு மாறியுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா பணிகள், வங்கிக் கணக்குகள், சிம் கார்டு வாங்குவது, ஏன், குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ப்பது வரை 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை மிக அத்தியாவசியமான ஆவணமாகும். சில சமயங்களில் இந்த ஆவணம் தொலைந்து போனால் அல்லது அதன் எண் மறந்து போனால் மக்கள் தேவையற்று கவலை கொள்கின்றனர். ஆனால், ஆதார் எண் இல்லாமலேயே உங்கள் இ-ஆதாரை (e-Aadhaar) மீட்டெடுக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை மீட்டெடுப்பது எப்படி?
ஆதார் எண்ணை மறந்துவிட்டவர்கள், தங்களது இ-ஆதார் தகவல்களை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் எளிதாக மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐ.டி. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* முதலில், UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘My Aadhaar’ பிரிவில் உள்ள ‘Retrieve Lost or Forgotten UID/EID’ என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு உங்களது முழுப் பெயர், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐ.டி. மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கேப்சா குறியீட்டுடன் உள்ளிடவும்.
* பின்னர் ‘Send OTP’ என்பதைத் தேர்வு செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி-யை (OTP) உள்ளிட்டுச் சமர்ப்பிக்கவும்.
* இந்தச் செயல்முறைக்குப் பிறகு, உங்களது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும். அத்துடன், உங்களது ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால் என்ன செய்வது?
உங்களது மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாமல் இருந்தால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்கு (Aadhaar Enrollment Center) நேரில் செல்ல வேண்டும். அங்கு, ஆதார் அட்டை எடுக்கும்போது உங்களுக்கு வழங்கப்பட்ட 28 இலக்க EID (Enrollment ID) எண்ணை வழங்க வேண்டும். அத்துடன், கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்ய வேண்டும். இந்தச் சேவையைப் பெறச் சேவை கட்டணமாக சுமார் ரூ.30 வரை வசூலிக்கப்படலாம். இந்தச் செயல்முறை முடிந்த பிறகு, உங்களது இ-ஆதார் உங்களுக்குக் கிடைக்கும்.
Read More : சட்டமன்ற தேர்தலுக்கு சீமான் போட்ட மாஸ்டர் பிளான்..!! சின்னாபின்னமாக போகும் தவெக..!! கலக்கத்தில் விஜய்..!!












