அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய ஏற்றுமதித் துறைகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதே இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த வரி உயர்வால் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த பல துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
எந்தெந்த துறைகளுக்கு அதிகம் பாதிப்பு..?
ரத்தின கற்கள் மற்றும் நகைகள் : 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகைகள் பாதிக்கப்படும். ஏனென்றால், இதற்கு மொத்தமாக 52.1% வரி விதிக்கப்பட்டுள்ளது.
கடல் உணவுகள் : 224 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இறால் ஏற்றுமதியும் தற்போது ஆபத்தில் தத்தளித்து வருகிறது. இறால் மீதான மொத்த வரி 33.26% ஆக உயர்ந்துள்ளது.
தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் ரசாயனங்கள் : 118 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தோல் பொருட்கள் ஏற்றுமதி வரி விதிப்பின் காரணமாக பாதிக்கப்படும். அதேபோல், 234 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரசாயனங்கள் மீது 54% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆடை மற்றும் நெசவுத் துறை : 1.03 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும். நெய்யப்பட்ட ஆடைகள் மீதான வரி 60.3% ஆகவும், பின்னப்பட்ட ஆடைகள் மீதான வரி 63.9% ஆகவும் உயர்ந்திருக்கிறது. அதேபோல், கம்பளங்கள் மீதான வரி 52.9% ஆக உள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்துறை பொருட்கள் : 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்சார மற்றும் இயந்திர உபகரணங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் பாதிக்கப்படும். இவை பொறியியல் ஏற்றுமதியில் 17.07% இடத்தை வகிக்கின்றன. தற்போது 51.3% வரி விதிப்பின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் :
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இந்தியா வழங்கும் பொருட்களின் விலை 30% முதல் 35% வரை அதிகரிக்கும். இதனால், வியட்நாம், பங்களாதேஷ் போன்ற குறைந்த வரி சுமை கொண்ட நாடுகளுடன் போட்டியிட இந்தியா பலவீனமடையும்.
இந்த திடீர் வரி உயர்வு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) கடும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே குறைந்த லாபத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்கள், இந்த வரியை சமாளிக்க முடியாமல், வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இதன் விளைவாக உற்பத்தி நிறுத்தங்கள், மற்றும் வேலை வாய்ப்புகள் குறையும் அபாயம் இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் பதில் என்ன..?
வர்த்தக சங்கங்கள், தற்போதைய கடுமையான நிலையை எதிர்கொள்வதற்காக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அவை முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்.. ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும், ஏற்றுமதி கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்குதல், மற்ற நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக உருவாக்க வேண்டும்.
இந்திய ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவு :
மொத்தத்தில், ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் $8.65 பில்லியன் மதிப்புள்ள இந்தியப் பொருட்களில், பாதி அளவு இந்த வரியால், நேரடியாக பாதிக்கப்படலாம். அமெரிக்க சந்தை, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்த தாக்கம் பெரும் வர்த்தக பின்னடைவாக இருக்கலாம் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்தியா மாதந்தோறும் சராசரியாக 67 முதல் 71 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..
English Summary :
Key Indian Export Sectors Like Leather, Gems, Jewellery Impacted by 50% US Tariff
Industry experts warn that key Indian export sectors including leather, chemicals, footwear, gems and jewellery, textiles, and shrimp will face severe impact due to the 50% tariff imposed by the US.
Leave a Reply