கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர்கள் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின்கட்டணமும் உயர்கிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, இப்போது மக்கள் கூரை சூரிய மின்சக்தி (Rooftop Solar – RTS) அமைப்புகளை நோக்கித் திரும்பியுள்ளனர். இந்த மாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு, ‘பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியங்களை வழங்கி வருகிறது.
சேமிப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு :
சூரிய மின்சக்தி அமைப்புகளின் முக்கிய பலன்களில் ஒன்று, முதலீட்டுச் செலவை விரைவாக மீட்டெடுப்பதுதான். குறிப்பாக அதிக மின் நுகர்வு உள்ள வீடுகளில், ஓரிரு ஆண்டுகளுக்குள் செலவை ஈடுகட்டிவிட முடியும். மேலும், இந்த அமைப்புகள் கார்பன் உமிழ்வை குறைத்து, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத தூய்மையான சக்தியை உற்பத்தி செய்வதால், இது பசுமையான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கிறது. பொதுவாக, ஒரு கிலோவாட் (kWp) அமைப்பை நிறுவ சுமார் 10 சதுர மீட்டர் கூரை இடம் மட்டுமே போதுமானது.
பயனர்களின் அனுபவம் :
தனி ராம் கஹ்லோட் (குருக்ஷேத்திரா): ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான இவர், 2021-ல் தனது 3.5 கிலோவாட் அமைப்பிற்கு மானியத்திற்கு பிறகு சுமார் ரூ. 1.2 லட்சம் செலவிட்டார். முன்னதாக, கோடையில் இவருக்கு ரூ. 35,000 வரை மின்கட்டணம் வந்த நிலையில், இப்போது அது ரூ. 16,000 ஆகக் குறைந்துள்ளதாக கூறுகிறார். மேலும், “நான் முதலீட்டை ஏற்கனவே மீட்டுவிட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமித் ஜெயின் (இந்தூர்): 3 கிலோவாட் அமைப்பை ரூ. 2 லட்சம் செலவில் நிறுவிய இவருக்கு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 78,000 மானியம் கிடைத்ததால், இறுதிச் செலவு ரூ. 1.2 லட்சமாக குறைந்துள்ளது.
விஷால் பெட்ஸே (நாசிக்): நிதிப் பலனைவிட, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டே சோலார் அமைப்பை நிறுவிய முதலீட்டு ஆலோசகரான இவர், “எங்களின் 3 கிலோவாட் அமைப்பு மாநில மின் நிலையத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதனால் சில மாதங்களில் பூஜ்ஜியம் அல்லது குறைந்தபட்ச கட்டணமே வருகிறது” என்று தெரிவிக்கிறார். இவரது குடும்பம் தற்போது சோலார் சக்தியைப் பயன்படுத்தி ஸ்கூட்டர், இன்டக்ஷன் ஸ்டவ் என பலவற்றை இயக்குவதுடன், அடுத்ததாக எலெக்ட்ரிக் கார் வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் சவால்கள் :
இந்தத் திட்டம் தனி வீடுகளுக்கு எளிதாக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சில சவால்கள் உள்ளன. ஒரு அபார்ட்மென்ட் அசோசியேஷன் முன்னாள் உறுப்பினர், “அனைத்து குடியிருப்பாளர்களையும் ஒரே கருத்துக்கு கொண்டுவருவதும், விழிப்புணர்வு இல்லாததால் நிதி சேகரிப்பதும் கடினமாக உள்ளது” என்கிறார்.
மேலும், உயரமான கட்டிடங்களில் கூரைப் பகுதி குறைவாக இருப்பதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனி அமைப்பை நிறுவ முடியாது. இதனால், அங்கே கூட்டு (Shared) அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்களே நடைமுறைக்கு ஏற்றவையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மானியம் பெறுவதற்கான வழிமுறை :
மத்திய அரசின் மானியத்தைப் பெற, பயனாளிகள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 78,000 வரை மானியம் பெறலாம். ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், சில ஆண்டுகளில் செலவை மீட்டெடுத்து, அதன் பிறகு மின்சார செலவில் கணிசமான சேமிப்பைப் பெற முடியும் என்பதால், கூரைச் சூரிய மின்சக்தி அமைப்புகள் எதிர்கால நோக்குடைய புத்திசாலித்தனமான முதலீடாக மாறியுள்ளன.
Read More : செல்போன் மூலம் உங்களை உளவு பார்க்கும் ரகசிய செயலி..!! இந்த அறிகுறிகளை கண்டால் உடனே இதை பண்ணுங்க..!!












