பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டாலே, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அதிரடிச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்க, ‘நோ காஸ்ட் இ.எம்.ஐ.’ (No Cost EMI) எனப்படும் வட்டி இல்லாத மாதத் தவணைத் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், இந்தத் திட்டம் உண்மையிலேயே பயனுள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
No Cost EMI திட்டத்தின் பின்னணி :
உண்மையில், எந்தவொரு வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாமல் மாதத் தவணை வசதியை வழங்குவதில்லை. பண்டிகைக் காலங்களில், பொருளின் உற்பத்தியாளர் அல்லது பிராண்ட் நிறுவனம், வட்டித் தொகையை வங்கிகளுக்கு மானியமாக செலுத்திவிடுகின்றன. இந்த மானியத்தை மறைத்து, ‘நோ காஸ்ட் இ.எம்.ஐ.’ என விளம்பரப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ரூ.40,000 மதிப்புள்ள ஒரு டிவியை ‘நோ காஸ்ட் இ.எம்.ஐ.’யில் வாங்கினால், அதே டிவியை மொத்தமாக பணம் கொடுத்து வாங்கும்போது அதன் விலை அதைவிட குறைவாகவே இருக்கும். சில சமயங்களில், வங்கிகள் ‘செயலாக்கக் கட்டணம்’ (Processing Fee) என்ற பெயரில் சில கட்டணங்களை வசூலிக்கும்.
கவனிக்க வேண்டியவை :
ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்கும்போது, ஒரே பொருளின் விலையை வெவ்வேறு தளங்களில் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம். மொத்தமாக பணம் கொடுத்து வாங்கும்போது என்ன விலை..? ‘நோ காஸ்ட் இ.எம்.ஐ.’யில் வாங்கும்போது என்ன விலை..? என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் மறைமுகமான வட்டி இருக்கிறதா என்பதை எளிதாக கண்டறியலாம்.
மேலும், சில குறிப்பிட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்குக் கிடைக்கும் கேஷ்பேக் சலுகைகளையும் கவனத்தில் கொள்வது நன்மை தரும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். விளம்பரங்களில் மயங்காமல், அனைத்து சலுகைகளையும் நன்கு ஆராய்ந்து, விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்குவதே புத்திசாலித்தனம்.
Read More : அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள தமிழக அமைச்சர் யார் தெரியுமா..? டாப் 10 லிஸ்ட் இதோ..!!