நானும் விவசாயி தான்..!! கஷ்ட, நஷ்டங்கள் எனக்கும் தெரியும்..!! அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு கலந்துரையாடி அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

பின்னர் அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டன. அதில் இருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. விவசாய உற்பத்திக்கு அத்தியாவசியமான மும்முனை மின்சாரம் தடை இல்லாமல் வழங்கப்பட்டது.

ஆனால், தற்போதைய ஆட்சியில் இத்தகைய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது, விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் முழுமையாக வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.

மேலும், நான் அமெரிக்கா சென்றபோது, பால் பண்ணை ஒன்றை பார்வையிட்டேன். ஒரே இடத்தில் தினமும் 1,35,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை பார்த்தேன். அங்கு ஒரு மாடு 65 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இதுபோன்ற மாடுகளை நம் மாநில விவசாயிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், நவீன கால்நடை பூங்கா ஒன்றை உருவாக்கினோம்.

அந்தப் பூங்கா மூலம் கலப்பின மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆடு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற வேறு உற்பத்தித் துறைகளையும் ஊக்குவிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒரு பகுதிக்கு நான் தொடக்க விழாவை நடத்தினேன். மீதமுள்ள பகுதிகள், எனது தொடர்ந்து வலியுறுத்தலுக்குப் பிறகு, கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன. இருப்பினும், அங்கு இன்னும் தேவையான வசதிகள் முழுமையாக வழங்கப்படவில்லை.

நானும் விவசாயம் செய்தவன். விவசாயத்தில் இருக்கும் சிரமங்களும், நஷ்டங்களும் எனக்குத் தெரியும். எனவே, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்கள் ஆட்சியின் முக்கிய நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்..!! இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை..!! வீடு தேடி வரும் பொருட்கள்..!!