டிட்வா புயல் மற்றும் அதை தொடர்ந்த கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்தனர்.
பயிர் சேதங்களுக்கு ரூ. 20,000 நிவாரணம் :
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டிட்வா புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், மழையால் சேதமடைந்த விளைநிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கடந்த அக்டோபர் 2025-இல் பெய்த மழையினால் 33% சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
உயிரிழப்புகள் மற்றும் கால்நடைகளுக்கும் இழப்பீடு :
புயல் மழையின்போது ஏற்பட்ட சேத விவரங்களையும் அமைச்சர் ராமச்சந்திரன் பட்டியலிட்டார்.
உயிரிழப்புகள்: சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கால்நடை சேதம்: மழை காரணமாக 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
வீடு சேதம்: மொத்தம் 1601 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றுக்கும் அரசு விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்கப்படும்.
சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் உடைமைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, உரிய நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேலும், சென்னையில் ஒரே நேரத்தில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நீர் தேக்கத்தை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வெளியேற்றியதாகவும், முறிந்து விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.











