தமிழ்நாட்டில் வீட்டு சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் 1.33 கோடி வீட்டு சமையல் சிலிண்டர் பயனர்களுக்கு சேவையளித்து வருகிறது. அரசுப் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் இந்நிறுவனம், நுகர்வோரின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.
இதில், 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டிற்கும், 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வணிக உபயோகத்திற்கு வழங்கப்படுகின்றன. அதேபோல், கேஸ் சிலிண்டர்களுக்கான ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களை இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்கிறது. மேலும், புதிய ரெகுலேட்டர்கள் வணிக சிலிண்டர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
அதோடு, கேஸ் பாதுகாப்புக்காக வீட்டு மற்றும் வணிக சிலிண்டருக்கான ரப்பர் குழாய்களை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். ஆனால், பெரும்பாலோர் இதை முறையாக பின்பற்றாமல் இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ரப்பர் குழாய் மாற்ற வேண்டிய நுகர்வோர் விவரங்கள் அனைத்தும் கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளதால், அந்த ஏஜன்சிகளுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர்கள் ரப்பர் குழாய்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய புகார்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உதவிகளை பெற 1800 2333 555 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சென்னை அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 044 2433 9236 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதோடு, அனைத்து கேஸ் ஏஜன்சிகளிலும் வாடிக்கையாளர் கருத்து மற்றும் புகார் பதிவுகள் இருப்பதால், அங்கு இந்தியன் ஆயில் அதிகாரிகளின் தொடர்பு விவரங்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில், மேலும் ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, பெரும்பாலான வீடுகளில் பல ஆண்டுகளாக ஒரே கேஸ் அடுப்பைப் பயன்படுத்தி வருவதால், பழைய அடுப்புகளின் செயல்திறன் குறையும் போது, சாதாரணத்தைவிட அதிகமான கேஸ் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, வீடுகளில் பாதுகாப்பு குறைவான மற்றும் திறன் குறைந்த கேஸ் அடுப்புகளை மாற்றும் பணியையும் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது தீவிரமாக மேற்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒரே அடுப்பு பயன்படுத்தி வரும் நுகர்வோரிடம் புதிய அடுப்பை மாற்றுமாறு வலியுறுத்தி வருகிறது.
மேலும், 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக புதிய அடுப்பு வாங்க அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “பல வீடுகளில் இன்னும் 8 ஆண்டுகளுக்கு மேல் பழைய கேஸ் அடுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இவை பாதுகாப்பிலும் திறனிலும் குறைவாக இருப்பதால் அதிக கேஸ் செலவிடப்படுகிறது. அதே சமயம், நவீன, உயர் வெப்ப திறன் கொண்ட கேஸ் அடுப்புகளை பயன்படுத்தினால், ஆண்டுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வரை சேமிக்க முடியும்” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Read More : கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! மாதம் ரூ.35,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!