சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், தனியார் ஆம்னி பேருந்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த 3 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் சங்கர் (45) என்பவர் பயணம் செய்துள்ளார். இவர், கோவையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் விற்பனைக்காக 3 கிலோ தங்க கட்டிகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு பயணித்துள்ளார்.
நள்ளிரவு 12:45 மணியளவில், ஆம்னி பேருந்து சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் டோல்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, பயணிகள் டீ குடிப்பதற்காக கீழே இறங்கிச் சென்ற நிலையில், சங்கரும் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்துள்ளார். அப்போது தான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பையில் இருந்த 3 கிலோ தங்க கட்டிகள் மாயமாகியிருந்தன. இதையடுத்து, பதறிப்போன சங்கர், உடனே சங்ககிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கு வந்த போலீசார், பேருந்தில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சங்கர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் விஜிபாபு என்ற இளைஞர் பயணித்துள்ளார்.
பேருந்து டோல்கேட்டில் நின்றபோது, விஜிபாபு கீழே இறங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர், அவர் பேருந்தில் மீண்டும் ஏறவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : விவசாயிகளே..!! ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க மானியம்..!! பயிற்சியும் உண்டு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!