மாடு வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று, அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் தூக்கிய வீசிய வியாபாரியை சங்ககிரி போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு (வயது 70). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாடு வியாபாரி ஏழுமலையிடம், மாடு ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, ஜூலை 23ஆம் தேதி காலை கொங்கணாபுரத்தில் மாடு வாங்கித் தருவதாக கூறி சின்னபொண்ணுவை ஏழுமலை அழைத்துச் சென்றுள்ளார். பின்ன, மாலை ஏழுமலை மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, சின்னபொண்ணு எங்கே என அவரது மகன் மதியழகன் கேட்டபோது, அவரை மகுடஞ்சாவடியில் உள்ள உன் சகோதரி வீட்டுக்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டதாக ஏழுமலை கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மதியழகன், தனது சகோதரி வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அங்கு சின்னபொண்ணு வராதது தெரியவந்தது. பின்னர், பல இடங்களில் அவரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மதியழகன், சங்ககிரி காவல்நிலையத்தில் சின்னபொண்ணுவை காணவில்லை என புகார் அளித்தார்.
இதற்கிடையே, ஏழுமலையின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர், அவரைப் பிடித்து விசாரிக்கையில், தாரமங்கலம் அருகே பவளத்தானுார் ஏரியில் சின்னபொண்ணுவை கொலை செய்து, சாக்கு பையில் மூட்டை கட்டி தூக்கி வீசியதாக தெரிவித்தார்.
பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில், சின்னபொண்ணுவின் தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், ஏழுமலையை கைது செய்தனர். இந்த கொலையை ஏன் செய்தார்..? நகை – பணத்திற்காகவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : Google முதல் Vivo வரை..!! ஆகஸ்ட் மாதம் வெளியாகும் அதிரடி ஸ்மார்ட்போன்கள்..!! விலை எவ்வளவு..?
Leave a Reply